ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான். இறைவன் நமக்களித்த இவ்வரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நமது தவறான வழிமுறைகளையும், செயல்களையும் களைந்துவிட்டு இறைவனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழிமுறையினிலே நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இப்புனித மாதத்திலே நாம் ஓர் உறுதிமொழி எடுக்கவேண்டும்.

அந்த வகையில், இஸ்லாத்தின் உயிர் நாடியான நமது ஏகத்துவ நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்து, நமது நம்பிக்கைகளை, செயல்களை சீர்திருத்திக் கொள்வதற்காக ஏகத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ‘வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல்’ என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று (மனமார) அறிந்த நிலையில் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). (ஆதாரம்: முஸ்லிம்)

ஏகத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்துகின்ற நபி (ஸல்) அவர்களின் இப்பொன்மொழியில் கூறப்பட்டிருப்பதைப் போன்று வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதியாக நம்பிக்கை கொள்வதோடு அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்ட வணக்கங்கள் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே செய்ய வேண்டும். அப்பொழுது தான் இந்த நபிமொழியில் கூறப்பட்டிருப்பது போன்று அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்று மனதார நம்பியது போன்றதாகும். வணக்கங்களை அல்லாஹ்விற்கே உரித்தானதாக்குவதென்றால் முதலில் வணக்கம் என்றால் என்ன? என்பதை அறிந்தால் மட்டுமே அதனை அவன் ஒருவனுக்கே செய்ய இயலும். இதை அறிந்துக் கொள்வதிலேயே குளறுபடி என்றால் பின்னர் நாம் எவ்வாறு வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்தவர்களாவோம்?

வணக்கம் என்றால் என்ன? என்பதை அறிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றமே அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களான பிரார்த்தனை (துஆ) செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், மன்றாடுதல், அழைத்துப் உதவிதேடுதல், பாதுகாவல் தேடுதல் போன்ற வணக்கங்கங்களை அல்லாஹ் அல்லாத இறைநேசர்களிடமும், நபிமார்களிடத்திலும் செய்து அல்லாஹ்வுக்கு இணைவைப்பு என்னும் மாபெரும் அநியாயத்தைச் செய்வதற்கு காரணமாகின்றது.

ஆனால் இத்தகைய இணைவைப்பு என்னும் மாபாதக செயல்களைச் செய்கின்றவர்களும், ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்றே வெறும் வாயளவில் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் செயல்களோ அதற்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்குவதாக இருக்கிறது. நம்பிக்கையின் வெளிப்பாடே செயல்கள்! நம்பிக்கைகள் தவறானதாக இருக்கும் பட்சத்தில் செயல்களும் தவறானதாகவே இருக்கும். வணக்கம் என்றால் என்ன? என்ற அறியாமையே இத்தகைய தவறான நம்பிக்கைகளுக்கும் செயல்களுக்கும் காரணமாக அமைகின்றது. ஏக இறைவனை ஈமான் கொள்வதோடல்லாமல் ‘இணைவைப்பு’ என்ற செயல்களின் மூலம் அந்த ஈமானை களங்கப்படுத்தாதவர்களே மறுமையில் வெற்றி பெற்றவர்களாக முடியும் என்பதை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.

“இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்” (31:13)

“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்” (6:82)

பிரார்த்தனையே (துஆ) வணக்கங்களில் தலையானதாகும்!

நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் பிரார்த்தனை அது தான் வணக்கமாகும் எனக் கூறிவிட்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (திர்மிதி).

அல்லாஹ் கூறுகிறான்: –

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)

நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: –

நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.

உதவி தேடுதலும் வணக்கத்தைச் சார்ந்ததே!

“நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” அல்குர்ஆன் (2:107)

“அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” அல்குர்ஆன் (7:197)

பாதுகாப்பு தேடுவதும் ஒரு இறைவணக்கமே!

‘(நபியே) நீர் கூறுவீராக! வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்’ (113:1)

‘(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்’ (114:1)

இது போன்ற இன்னும் ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் பிரார்த்தனை (துஆ) செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், மன்றாடுதல், அழைத்துப் உதவிதேடுதல், பாதுகாவல் தேடுதல் போன்றவைகளும் வணக்கத்தைச் சார்ந்ததே என்றும் அவைகளை அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கு மாற்றமாக சிலர், வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்-இறைவன்’ இல்லை என்று கூறிய அதே வாயினாலேயே அல்லாஹ் அல்லாத இறைநேசர்களையும், வலிமார்களையும் பிரார்த்தித்து அழைத்து அவர்களிடம் உதவி கோரி அவர்களுக்கு நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களையும் வேறு இலாஹ்களாக ஆக்கிக்கொள்கின்றனர். அவர்கள் இதை கூறாவிட்டாலும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய இத்தகைய வணக்கங்களை இறைவனல்லாதவர்களுக்காக செய்கின்ற போது வணக்கவழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்ற ஏகத்துவத்திற்கு களங்கம் கற்பித்தவர்களாகின்றனர். இறைவன் நம்மைப் படைத்துப் பரிபாலித்துக்கொண்டிருக்கின்ற வேளையிலே அவனை விட்டுவிட்டு அவனுடைய அடியார்களிடம் இத்தகைய வணக்கங்கங்களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணைவைத்து மாபெரும் அநீதியிழைத்தவர்களாகின்றனர். அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்” (6:88)

வணக்கம் என்றால் என்ன? என்ற அறியாமையினால் நம்முடைய வணக்கங்களை இறைவனல்லாதவர்களுக்காக செய்து நமது நல்லமல்கள் பாழாக விடலாமா?

இரு வருடங்களுக்கு முன்பு ஹஜ்ஜூ செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருந்த எனது நண்பரின் உறவினர் ஒருவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அவரிடம் பேசும் போது, அவர் கூறியவைகளில் சில…

‘நான் ஹஜ்ஜூக்கு புறப்படும் போது எங்களூரில் இருக்கும் தர்ஹாவில் அடக்கமாகியிருக்கும் மஹானிடம், நல்ல முறையில் ஹஜ்ஜூ செய்துவிட்டு வருவதற்காகப் பிரார்த்தனை செய்து விட்டு தான் வந்தேன்’

‘அது போல திரும்பிச் செல்லும் போதும் முதலில் அந்த தர்ஹாவிற்கு சென்று அந்த மகானுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் வீட்டிற்குச் செல்வேன்’

இதை நான் இங்கு கூறுவதற்கு காரணம், இத்தகைய தவறான நம்பிக்கையுடைய அநேக முஸ்லிம்கள், ஏகத்துவத்தின் அடிப்படையை அறியாத காரணத்தால், தர்ஹாக்களில் தாம் செய்கின்ற செயல்கள் யாவும் வணக்கத்தைச் சார்ந்ததாகும் என்பதை பற்றிய தெளிவில்லாததாலும், இத்தகைய செயல்களைச் செய்தால், அது இணைவைப்பு என்னும் மாபெரும் குற்றமாகி அதன்மூலம் தாம் அரும்பாடுபட்டு செய்த நன்மைகளையெல்லாம் இழந்துவிடுவோம் என்ற அறியாமையினாலுமே  அவ்வாறு செய்கின்றனர். கஷ்டப்பட்டு நோன்பு நோற்று, இரவுகளில் கால்கடுக்க நின்று வணங்கி, ஹஜ்ஜூடைய காலங்களில் பெரும் பொருட்செலவில் பல சிரமங்களுடன் மக்கா சென்று ஹஜ் செய்து சேர்த்த நன்மைகளெல்லாம் அறியாமையினால் அவ்லியாக்களிடம் பிரார்த்திப்பதன் மூலம் பலனற்று போய்விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை!

இத்தகைய தவறான ஏகத்துவ நம்பிக்கைகளையுடைய சகோதர, சகோதரிகள் நம் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்களாக, சகோதர, சகோதரிகளாக, உறவினர்களாக இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவ அடிப்படையை போதித்து அவர்களை இத்தகைய தவறான சிந்தனைகள், செயல்களிலிருந்து விடுவிப்பது நமது கடமையாகும். மணமுரண்டாக விதண்டாவாதம் புரிபவர்களை புறந்தள்ளிவிடுவோம்! அல்லாஹ் கூறுகின்றான்:

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” (66:6)

அல்லாஹ்வின் பெயர்களில், பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்றால் என்ன? – இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

(குறிப்பு: நான் குறிப்பிட்ட எனது நன்பரின் உறவினர் பின்னர் உண்மையான ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே ஹஜ் செய்து திரும்பிச் சென்றார். அல்லாஹ் அவருடைய ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்கி அவருக்கு நல்லருள் புரிவானாகவும்)

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *