அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

3,064 viewsஅச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 3

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 19th September 2010

أحكام الغسل في الإسلام

கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை:

சென்ற தொடரில் குளிப்பைக் கடமையாக்கக்கூடியவ அம்சங்களைப் பார்த்தோம். இப்போது எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கடமையான குளிப்பு பூரணமாக அமைவதற்குப் பின்வரும் இரண்டு அம்சங்கள் அவசியமாகின்றன.

1) நிய்யத்:

கடமையான குளிப்பை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன் என்று மனதால் உறுதியாக எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும். நிய்யத் இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த ஒரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

( إنما الأعمال بالنيات وإنما لكل امرىء ما نوى )

‘நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உமர் (ரழி) , நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 
நிய்யத் இல்லாமல் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இருப்பினும் சிலர் குறிப்பிட்ட சில அரபு வாசகங்களைப் பாடமிட்டு ‘நிய்யத்’ என்ற பெயரில் ஓதி வருகின்றனர். இதற்கு நபிவழியில் எவ்வித முன்மாதிரியும் கிடையாது. எனவே, உள்ளத்தால் கொள்ள வேண்டிய நிய்யத்தை வாயால் மொழிவது ‘பித்அத்’ என்ற பாவமாகும்.

2) குளிக்கும் போது உடல் முழுவதும் நனைய வேண்டும்: 

ஏனெனில் குளித்தல் எனும் போது அது உடல் முழுவதும் நனைவதையே குறிக்கும். குளிக்கும் போது உடலில் ஒரு சில பகுதிகள் நனையாமல் விட்டாலும்  கடமையான குளிப்பு நிறைவேறமாட்டாது.

மேற்படி இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு பின்வரும் அமைப்பில் குளிப்பது சன்னத்தானது:

  1. முதலில் கைகள் இரண்டையும் மூன்று முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. தொடர்ந்து மர்மஸ்தானத்தைக் கழுவுவது.
  3. பின்னர் தொழுகைக்காக வுழூச் செய்வது போன்று வுழூச் செய்து கொள்வது. வுழூவின் நிறைவில் கால்களைக் கழுவுவதைப் பொறுத்தவரை உடனே கழுவிக் கொள்ளவும் முடியும். அல்லது குளித்து முடிந்ததும் இறுதியாகக் கழுவிக் கொள்ளவும் முடியும்.
  4. வுழூச் செய்து முடிந்ததும் தண்ணீரைத் தலையில் மூன்று முறை ஊற்றுவது. அப்போது முடியைத் தேய்த்து குடைந்து கொள்ள வேண்டும்.
  5. தொடர்ந்து உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் குளிப்பது. அப்போது வலதைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். குளிக்கும் போது அக்குள், காதுகள், தொப்புள், கால் விரல்கள் போன்ற தேய்க்க முடியமான பகுதிகளைத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பார்க்க:புகாரி (265), (முஸ்லிம் (744) பாடம்: கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை)

பெண்களும் இவ்வாறு தான் தமது கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். குளிக்கும் போது அவர்கள் தமது கூந்தலை அவிழ்க்க வேண்டி அவசியமில்லை.

ஒரு பெண்மணி நபியவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் கூந்தல் கட்டும் பழக்கத்தையுடையவள். கடமையான குளிப்பின் போது அதை அவிள்க்க வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்:  ‘அதன்மீது மூன்று அள்ளு நீரை ஊற்றினால் போதமானது….’ என்று கூறினார்கள்.  (அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழி), நூல்: இப்னு மாஜாஹ் (603))

பெண்கள் தமது கூந்தலை அவிழ்க்க வேண்டியதில்லை என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்களும் கூறியுள்ளார்கள்.  (பார்க்க:  முஸ்லிம் (773))

கடமையான குளிப்புடன் தொடர்பான சில நடைமுறைப் பிரச்சினைகள்:

A) ஜனாபத், ஹைழ் போன்ற பல காரணிகளால் குளிப்புக் கடமையாகி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குளிக்க வேண்டுமா?

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக நிய்யத்தை வைத்துக் கொண்டு ஒரு முறை குளித்தால் போதுமானது என்பதே மிகப் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இமாம் இப்னு ஹஸ்ம், ஷேய்க் அல்பானீ போன்றோர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குளிக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

‘நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும்’ என்ற ஹதீஸின் அடிப்படையில் முதல் கருத்தே மிகச் சரியானது. அல்லாஹு அஃலம்.

B) கடமையான குளிப்பை நிறைவேற்றிய ஒருவர் தொழுகைக்காக மீண்டும் வுழூச் செய்யவேண்டிய அவசியமில்ல:

عَنْ عَائِشَةَ قَالَتْ :كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ

‘நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்கள்: அஹ்மத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா)

C) ஆண் குளித்து எஞ்சிய நீரில் பெண்ணும், பெண் குளித்து எஞ்சிய நீரில் ஆணும் குளிக்க முடியும்:

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى جَفْنَةٍ فَجَاءَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- لِيَتَوَضَّأَ مِنْهَا – أَوْ يَغْتَسِلَ – فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى كُنْتُ جُنُبًا. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ الْمَاءَ لاَ يَجْنُبُ ».

நபியவர்களின் மனைவியொருவர் ஒரு பாத்திரத்தில் குளித்து விட்டுச் சென்றார். அதில் (எஞ்சியிருந்த நீரில்) வுழூச் செய்வதற்கு அல்து குளிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்க்ள. அப்போது அம்மனைவி, அல்லாஹ்வுடைய தூதரே! நான் பெருந் தொடக்குடன் இருந்தேன் என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ‘ நிச்சயமாக தண்ணீர் தொடக்காவதில்லை’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்க்ள்: அபூதாவுத், திர்மிதீ. இப்னு ஹிப்பான்)

D) நிர்வாணமாகக் குளித்தல்:
 
அடுத்தவர்களின் பார்வைக்குப்படாத விதமாக மறைவான இடங்களில் நிர்வாணமாகக் குளிப்பதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் கிடையாது. மாறாக, நிர்வாணமாகக் குளிப்பதற்கு அனுமதி உண்டு என்பதைச் சுட்டிக்காட்டக் கூடிய வகையில் சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. உதாரணமாக நபி அய்யூப் (அலை ) அவர்கள் நிர்வாணமாகக் குளித்தார்கள். (புகாரி (275)) , மூஸா (அலை) அவர்களும் நிர்வாணமாகக் குளித்துள்ளார்கள். ( புகாரி (274) , முஸ்லிம் (339)) போன்ற ஹதீஸ்கள் இதை உறுதி செய்கின்றன.

E) குளித்து முடிந்த பின்னர் ஓதுவதற்கென்று பிரத்தியேகமான எந்த துஆவும் ஹதீஸ்களில் இடம்பெறவில்லை:

F) குளிப்புக் கடமையானவர்கள் நோய், கடும் குளிர், தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் குளிக்க முடியாவிட்டால் தயம்மும் செய்து கொள்ள வேண்டும். 4:43, 5:6 ஆகிய வசனங்கள் இதை வலியுறுத்துகின்றன.

தயம்மும் செய்யும் முறை:

நிய்யத் வைத்துக் கொண்டு தனது இரு கைகளையும் பிஸ்மில்லாஹ்ச் சொல்லி புழுதி கலந்த மண்ணில் அல்லது சுவர் போன்றவற்றில் அடித்து, பின்னர் கையின் உள் பகுதியை வாயால் ஊத வேண்டும். அதன் பின்னர் அக்கைகளால் முகத்தையும் மணிக்கட்டு வரை இரண்டு கைகளையும் தடவ வேண்டும். (புகாரி, முஸ்லிம் , தாரகுத்னீ)

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது அனைத்து வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் செய்வதற்கு அருள் புரிவானாக!

எம்.எல். முபாரக் ஸலபி M.A,
mubarakml @ g m a i l . c o m

3,064 views அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு பிரிவு: கட்டுரைகள், தொழுகை

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்


AWSOM Powered