அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-7

உங்களுக்குள் வேற்றுமை கொள்ளாதீர்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார் : “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

“நபி (ஸல்) அவர்கள், ‘வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்’ என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார். ஆதாரம் : புகாரி

நபி (ஸல்) அவர்கள் இரவில் செய்த பிரார்த்தனை!

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமைநாள் உண்மையானது. இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன் மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.

ஸாபித் இப்னு முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்: சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் இதை நமக்கு அறிவித்துவிட்டு, ‘நீ உண்மை; உன் சொல் உண்மை’ என்றார்கள். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்தின் கருவூலம்!

அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லி வந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மெல்லக் கூறுங்கள்). ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, அருகிலிருந்து செவியேற்பவனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்’ என்றார்கள். பிறகு நான் என் மனத்திற்குள் ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலம்டவும் முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘அப்துல்லாஹ் இப்னு கையேஸ! ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று சொல்லுங்கள். ஏனெனில் அது, ‘சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்’ என்றோ, ‘அதைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா?’ என்றோ சொன்னார்கள். ஆதாரம் : புகாரி

நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறை: –

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அறிவித்தார் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் ‘இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக! இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!’ என்று பிரார்த்திக்கட்டும். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்தில் நுழைய ஆசையா?

“நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி

தூங்குவதற்கு முன்…

“நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி

இறைவனுக்கு மிக நெருக்கமானவராக வேண்டுமா?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

தஜ்ஜாலின் அடையாளங்கள்: –

“இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃ’பிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *