அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6

பள்ளிவாசல்கள் கட்டுவதின் சிறப்பு!

உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி

தும்மினால் கூறவேண்டியவைகள்!

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) கட்டளையிட்ட ஏழு விஷயங்கள்: –

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.
4. நலிந்தவருக்கு உதவுவது.
5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது
6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.
7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.
2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

(ஆதாரம் : புகாரி)
பாவம் எனும் வேலியைச் சுற்றி மேயாதீர்கள்!

“ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேம்ப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :நுஃமான் இப்னு பஷீர்(ரலி), ஆதாரம் : புகாரி.

குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமான அத்தியாயம்!

“ஒருவர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (‘நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசி விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது’ என்றார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி), ஆதாரம் : புகாரி.

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்!

“மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி.

இறைவனைப் பார்த்ததாகவும் மறைவான விஷயங்கள் தமக்குத் தெரியும் என்றும் கூறுபவர் பொய்யரே!

ஆயிஷா(ரலி) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள். அறிவிப்பவர் : மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

நீங்கள் படுக்கைக்குச் சென்றால்…

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமர்த்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி), ஆதாரம் : புகாரி.

தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் போது…

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்து விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

மற்றவர்களுக்கு அனுப்ப...

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *