இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 1

أحكام الغسل في الإسلام

இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது மனிதனுடைய வாழ்க்கையுடன் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் வழி காட்டுகிறது. அந்த அடிப்படையில் குளிப்பது பற்றிய பூரண விளக்கத்தையும் இஸ்லாம் தந்துள்ளது. எனவே இத்தொடரில் குளிப்பின் சட்டங்கள் பற்றி விரிவாக நோக்கலாம்.

எப்போது குளிப்பு கடமையாகும்?

பொதுவாக பின்வரும் சந்தர்ப்பங்களில் குளிப்பு கடமையாகும் என்று இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

1) இந்திரியம் வெளியாதல்
2) உடலுறவு கொள்வது.
3) ஒருவர் இஸ்லாத்தை தழுவுதல். (இது கருத்து வேறுபாட்டுக்குரியது.)
4) ஒரு முஸ்லிம் மரணிப்பது.
5) மாதவிடாய் ஏற்படுதல்.
6) பிரசவ ருது வெளியாகுதல்.

இந்திரியம் வெளியாதல்:

அதிகமாக தூக்கததிலேயே இது இடம் பெறுகிறது. ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கும் போது பெரும்பாலும் கனவுகள் காண்பதாலேயே இது ஏற்படுகின்றது. கனவு கண்டாலும் சரி; காணாவிட்டாலும் சரி விளித்தெழும் போது தனது ஆடையில் இந்திரியத்தின் அடையாளங்களைக் கண்டால் அவர் குளிக்க வேண்டும். இச்சட்டம் பெண்களுக்கும் பொருந்தும் .

‘ஒரு முறை ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வுடைய தூதரே! ஒரு பெண் கனவு கண்டு அதில் ஸ்கலிதமானால் குளிக்க வேண்டுமா என்று கேட்டார்.’ ஆம். அவள் (நீரை) இந்திரியத்தைக்கண்டால் குளிக்க வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)

ஒருவர் இந்திரியம் வெளியாவது போன்று கனவு காண்கின்றார். ஆனால் எழுந்து பார்க்கும்  போது அதற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை என்றால் அவர் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறே ஒருவர் இந்திரியம் வெளியாவது போன்று உணர்கின்றார்; ஆனால் இந்திரியம் வெளியாகவில்லை என்றால் அவரும் குளிக்கவேண்டியதில்லை.

இச்சை எதுவுமின்றி நோய், கடும்குளிர் போன்ற காரணங்களினால் சிலருக்கு இந்திரியம் வெளியாகும் . அவ்வாறே கடமையான குளிப்பை நிறைவேற்றிய பின்னரும் சிலருக்கு அவ்வாறு நிகழும். மேலும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது இந்திரியம் வெளியாகும். இவ்வாறான சந்தர்பங்களில் குளிக்க வேண்டுமா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. மிகப் பெரும்பாலான அறிஞர்கள் குளிக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டையே கொள்கின்றனர்; ஏனெனில் இந்திரியம் வெளியானால் குளிக்க வேண்டுமென்பதைச் சொல்லும் ஆதாரங்களிலிருந்து இக்கருத்தையே புரிந்து கொள்ள முடிகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்

உடலுறவு கொள்ளுதல்:

தாம்பத்திய உறவில் ஈடுபட்டு இந்திரியம் வெளியானால் குளிப்புக் கடமையாகும் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்து இந்திரியம் வெளியாகாவிட்டாலும் குளிப்பது கடமையாகும் .

‘(கத்னா செய்யப்பட்டது ) ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும் . இந்திரியம் வெளியாகாவிட்டாலும் சரியே’ என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். (தர்மிதி, இப்னுமாஜா)

ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்திக்காதவகையில் இல்லறத்தில் ஈடுபட்டு இந்திரியம் வெளியாகாவில்லை என்றால் குளிப்பது கடமையாகாது .

இந்திரியம் வெளியாவதன் மூலம்  குளிப்புக்கடமையானவர் தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகள் சிலவற்றை இங்கு நோக்கலாம்:

பிரச்சினை-1: குளிப்புக்கடமையானவர் பள்ளிவாசலில் தங்கலாமா ?

தீர்வு: குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிவாசலினுள் தங்குவதைத் தடுக்கக்கூடிய கருத்தில் சில நபிமொழிகள் காணப்படுகின்றன . அவற்றில் இடம்பெறும் ‘ஐஸ்றா பின்த் தஜாஜா’ என்ற அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதால் அந்த ஹதீஸ்கள் பலவீனமானவை என்று ஹதீஸ்கலை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்படுகின்றார்கள். அதேபோன்று நபித்தோழர்கள் குளிப்புக்கடமையான நிலையில் பள்ளிவாயலில் தங்கியிருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் ஆதபுர்வமான அறிவிப்புகளில் காண முடிகின்றது, அவற்றில் அவர்கள் வுழூச் செய்து கொள்ள வேண்டுமென்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரச்சினை-2: குளிப்பக் கடமையானவர் நகம் வெட்டுதல், முடிவெட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுவது கூடுமா?

தீர்வு: இவையனைத்தும் குளிப்புக் கடமையானவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதில் இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. ஏனெனில் இவற்றைத் தடுக்கக்கூடிய எவ்வித ஆதாரங்களும் கிடையாது.

பிரச்சினை-3: குளிப்பக் கடமையானவர்களுக்கு அல்குர்ஆன் ஓதுதல், அதனைத் தொடுதல் என்பவை அனுமதிக்கப்படுகின்றதா?

தீர்வு: இவ்விசயத்தில் இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள் மத்தியில் கடுமையான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அனேகமான அறிஞர்கள் இவை கூடாது என்ற கருத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் தமது கருத்துக்கு ஆதாரமாக சில நபிமொழிகளை முன்வைக்கின்றனர். மற்றும் சில அறிஞர்கள் குளிப்புக் கடமையானவர்களுக்கு அல்குர்ஆன் ஓதுதல், அதனைத் தொடுதல் என்பவை அனுமதிக்கப்பட்டவை என்று வாதிடுகின்றனர். இவற்றைத் தடைசெய்யும் கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்பதே இவர்களின் வாதமாகும். அல்லாஹு அஃலம்-

தொடரும் இன்சா அல்லாஹ்….

எம்.எல். முபாரக் ஸலபி M.A.
mubarakml @ gmail . com

மற்றவர்களுக்கு அனுப்ப...

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *