ஸலவாத்துன்னாரியா!

நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான்.

தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, மவ்லிது, புர்தா, ஸலவாத்துன்னாரியா, என்று இந்தக் கூலிப் பட்டாளங்களின் கண்டு பிடிப்புகள் தொடருகின்றன.

இந்த ஸலவாத்தின் கருத்துக்கள் முழுவதும் தவறானவை. அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கொண்டுதான் நாட்டங்கள் நிறைவேறுவதாகவும், கஷ்டங்கள் தீருவதாகவும், இந்த ஸலவாத்தில் காணப்படுகின்றது.  இதற்கெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.

“இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்”
(அல் குர்ஆன் 33 : 56)

என்னும் திருமறை வசனம் அருளப்பட்ட போது, நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ‘நாங்கள் எப்படி ஸலவாத் சொல்வது?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

“அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின்” என்று துவங்கும், அத்தஹிய்யாத்தில் ஓதுகின்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.

அரபியைத் தாய் மொழியாகக் கொண்ட நபித் தோழர்கள், ஸலவாத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தான் தெரிந்துக் கொண்டார்கள். அப்படியிருக்க, யாரோ உருவாக்கிய, அதுவும் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் முரணான கருத்துக்களை உள்ளடக்கிய ஸலவாத்தை, புனிதம் என்று கருதுவதும், அதைக் கொண்டு நாட்டங்கள் நிறைவேறும், கஷ்டங்கள் தீரும் என்று நம்புவதும், மார்க்கத்திற்கே விரோதமானது என்பதை மறந்து விடக் கூடாது.

நன்றி : தவ்ஹீது அரங்கம்

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *