அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்!

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

“நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” அல்குர்ஆன் (2:107)

“நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்” அல்குர்ஆன் (2:153)

“அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்” அல்குர்ஆன் (3:150)

“(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்” அல்குர்ஆன் (3:160)

“மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்” அல்குர்ஆன் (4:45)

“அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” அல்குர்ஆன் (7:197)

“வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் – அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை” அல்குர்ஆன் (9:116)

மேற்கண்ட வசனங்கள் நாம் நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடமே கேட்டுப் பெற வேண்டும் என்பதையும் அல்லாஹ் அல்லாத உதவி செய்பவர் எவரும் இல்லை என வலியுறுத்துகிறது. எனவே நம் தேவைகளை வல்ல அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுவோமாக.

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *