இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது.

இரண்டு:தவஸ்ஸுல் என்பதற்கு நபியின் சிபாரிசு, அவர்களின் பிரார்த்தனை என்ற கருத்தைக் கொடுப்பது. அதாவது நபியவர்கள் யார்யாருக்குப் பிரார்த்தனை செய்தார்களோ, மறுமையில் யார்யாருக்கு சிபாரிசு செய்வார்களோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வை நெருங்க முடியும். அவர்களும் தவஸ்ஸுலைக் கொண்டு பயனடைந்தவர்கள் கூட்டத்தில் சேருவார்கள். இவ்விரு கருத்துக்குட்பட்ட தவஸ்ஸுலை எவராலும் புறக்கணிக்க இயலாது. மீறி இக்கருத்தை புறக்கணித்தால் அவனை (காஃபிராக) நிராகரித்தவனாகக் கணிக்கப்படுவதுடன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய முர்தத்தாகவும் ஆக்கப்பட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டி தௌபாச் செய்து மீண்டும் இஸ்லாத்தைத் தழுவுமாறு அவனிடம் கூறப்படும். இஸ்லாத்தில் நுழைந்தால் அதோடு சரி. இல்லாவிட்டால் முர்தத்தாகக் கருதி வெட்டப்படும். ‘தவஸ்ஸுல்’ வஸீலா, என்பதை இப்படி விளங்குவது அவற்றுக்குரிய பொருத்தமான விளக்கமாகும்.ஏகத்துவத்தைப் போதிக்கின்ற வஸீலாவென்பதும் இதுவேதான். அல்லாஹ்விடமின்றி வேறு எவரிடத்திலும் உதவி தேடி பிரார்த்திப்பதற்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. இஸ்லாத்தின் அடிப்படையும் இதுவேயாகும். இதுவே உண்மையான தீனுல் இஸ்லாம். அன்றி வேறு ஒரு மதத்தை இறைவன் மார்க்கமாக யாரிடமிருந்தும் அங்கீகரிக்க மாட்டான்.

இப்படிப்பட்ட தீனை போதிப்பதற்காக இறைவன் தூதர்களை அனுப்பி அவர்கள் வழியாக வேதங்களையும் அருளினான். நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை நம்பி, அவர்களுக்குக் கீழ்படிந்து நடப்பதுவே மதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இதை இஸ்லாமிய சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தெரிந்திருக்க வேண்டும். மீறி யாராவது இதை நிராகரித்தாலும், அவர் காஃபிராகி விடுகிறார். நபியவர்களின் பிரார்த்தனை, சிபாரிசுகளினால் முஸ்லிம்கள் நிச்சயமாகப் பயனடைவார்கள் என்ற விஷயத்தை எவன் புறக்கணித்தாலும் காஃபிராகி விடுகிறான். ஆனால் முந்திய குஃப்ரோடு நிராகரிப்போடு இவனை ஒப்பிட்டுப் பார்க்கையில் இவன் கொஞ்சம் எளிய மாதிரியிலான நிராகரிப்பாளனாகத் தெரியலாம். எனவே நபிகளின் பிரார்த்தனையினாலும், சிபாரிசினாலும் மக்கள் பயன் பெறுவர் என்ற உண்மையை அறிவீனமாக எவர் மறுத்தாலும் அவருக்கு அது விளக்கிக் காட்டப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்பிரபஞ்சத்தில் வாழ்ந்திருக்கையில் முஸ்லிம் தோழர்களுக்காக வேண்டிய பிரார்த்தனைகளும், அவர்களுக்காகப் பரிந்து பேசிய சிபாரிசுகளும் பயன் தரக்கூடியவை என்பதை எவராலும் மறுக்க இயலாது.

மேலும், நபிகள் (ஸல்) அவர்கள் மறுமையில் செய்கின்ற சிபாரிசு பற்றி எல்லோரும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்கள். ஸஹாபாக்கள், தாபியீன்கள். மாபெரும் நான்கு மத்ஹபுடைய இமாம்கள், மற்றும் சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களும் நபி அவர்களுக்கு ‘ஷபாஅத்’ நிச்சயமாக உண்டென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அந்த ஷபாஅத்தில் பொதுவான ஷபாஅத்துமிருக்கிறது. தனிப்பட்ட முறையிலான ஷபாஅத்தும் இருக்கிறது. நபிகளின் உம்மத்தைச் சார்ந்தவர்களில் யார் யார் பெரும் பாவத்தினால் நரகில் கிடந்து தத்தளிக்கிறார்களோ, அவர்களுக்காக இறைவனின் ஆணையைப் பெற்று அவனிடம் அந்தப் பாவிகளுக்காகப் பரிந்து பேசுவார்கள். பாவிகளில் யார் உலகில் வாழ்ந்திருக்கும் போது ஏக இறை வழிபாட்டில் இருந்தார்களோஅவர்கள் இந்த பரிந்துரையினால் பிரயோசனமடைந்து, நரக வேதனையை விட்டும் ஈடேற்றம் பெறுவார்கள். இறைவனுக்கு இணை வைத்து முஷ்ரிக்குகளாக வாழ்ந்திருந்த எவரும் சிபாரிசினால் எள்ளளவும் பயன்பெற மாட்டார்கள். இவர்கள் நபிகளை எத்தனை அதிகமாக விரும்பி அன்பு வைத்திருந்தாலும் நபிகளின் இந்த ஷபாஅத்து முஷ்ரிக்குகளுக்குச் சிறிதும் பயனளிக்காது. ஏக இறைவழிப்பட்டைப் புறக்கணித்து நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து நேசித்து வாழ்ந்த அபுதாலிபும் அவரைப் போன்ற முஷ்ரிக்குகளும் நபியின் ஷபாஅத்தினால் நரக விடுதலை பெற முடியவில்லையே.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நாயகமே! மறுமை நாளில் தாங்களின் சிபாரிசைப் பெற்றுக் கொள்ளும் அடியார்களில் மிகப்பெரிய சௌபாக்கியவான்கள் யார்?’ என நபிகள் பெருமானாரிடம் வினவியதற்கு ‘கலப்பற்ற முறையில் உண்மையான உள்ளத்தால் எவர் ஷஹாதத் கலிமாவை மொழிந்து உலகில் வாழ்ந்தாரோ அவரே என்னுடைய ஷபாஅத்தைப் பெற்று மறுமையில் சௌபாக்கியவானாக இருப்பார்’ என்று விடை தந்தார்கள். (புகாரி)

நன்றி : இஸ்லாம்குரல்

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *