மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்!

காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அல்லாஹ் தன்னுடைய மிகப் பெறும் கிருபையால் அனைத்து சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் மூலம் நிம்மதி அடைய முடியும் என்று அழைக்கச் செய்தான்.

உண்மையான அமைதி மற்றும் நிம்மதி என்பது, நம்மையும், வானம் பூமியையும் மற்றும் இதற்கிடையில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனை எப்போதும் நினைவு கூறுவதில் தான் உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: –

” (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள் மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.”(அல்-குர்ஆன் 13:28-29)

ஆகையால் ஒருவர் அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதருடைய வழிமுறைகளை பின்பற்றாமல் தனக்கு தானே நிம்மதி அடைய முயற்சி செய்தால், அது அவன் பார்க்கின்ற, உணர்கின்ற சிலை வணக்கங்களின் பக்கம் அவனை இட்டுச் செல்லும். இதன் மூலம் அவன், அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற வெறுக்கத் தக்க குற்றத்தை செய்தவன் ஆகின்றான். அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்பது இஸ்லாத்தில் மிகப் பெறும் பாவமாகும் அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிலையில் மரணித்த ஒருவனை இறைவன் மன்னிக்க மாட்டான் மேலும் அவர்களுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கியும் விடுகிறான். முன்னால் வாழ்ந்த சமுதாயங்கள் அழிக்கப்பட்டதெல்லாம், அவர்களுக்கு தெளிவான அல்லாஹ்வின் போதனைகள் அவனுடைய தூதரின் மூலம் வந்த பின்பும், அதனை  பின்பற்றாமல் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரும் பாவமான அவனுக்கு இணை வைத்தது தான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)

‘நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்’ என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: ‘இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை” (அல்-குர்ஆன் 5:72)

மக்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனித மற்றும் மிருகங்களின் சிலைகள், கப்ருகளில் உள்ளவர்களை அழைப்பது ஆகியவைகள் அனைத்தையும் செய்வதற்கு ஒரே காரணம் அவர்களின் மூதாதையர்கள் அவ்வாறு செய்த காரணத்தினால் தான். அவர்கள், இந்த சிலைகள் தம்மை படைக்கவும் இல்லை, தமக்கு எதையும் கொடுக்கவும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தனர். மேலும் இந்த உருவங்கள் தமக்கு வாழ்க்கையையோ சொத்து சுகங்களையோ, குழந்தைகளையோ, இறப்பையோ  கொண்டு வருவதில்லை என்பதையும்  அறிந்திருந்தனர். மனித இனம் முழுவதும் ஏக மனதாக, “நாம் அனைவரும் இந்த உலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்ற  இறைவனின் படைப்பிகள் தான்” என்பதை நம்பியிருந்தனர். இருந்த போதிலும் இவர்கள், தங்களுக்குத் தாங்களே கடவுளாக்கி கொண்டவர்களையும் மகான்களாக்கி கொண்டவர்களையும் சிரம் பணிந்து மன்றாடி, கையேந்தி வழிப்பட்டு வருகின்றனர். தங்கள் மூதாதையர் செய்ததால் தவிர வேறெந்த காரணத்தையும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

இஸ்லாம் என்பது குர்ஆனின் போதனைகள் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமே அல்லாமல், மூதாதையர்களின் வழிமுறைகளை பின்பற்றக்கூடிய மார்க்கமல்ல. இதை அல்லாஹ்வும் அவனுடைய திருமறையில் வலியுறுதிக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால் ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்”  (அல்-குர்ஆன் 2:170-171)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: –

“அல்லது, ‘இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே! நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் – அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?’ என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்”  (அல்-குர்ஆன் 7:173-174)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: –

“அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் ‘நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?’ என்று கேட்ட போது: அவர்கள், ‘எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (அதற்கு) அவர், ‘நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் – பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்’ என்று கூறினார்”  (அல்-குர்ஆன் 21:52-54)

இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!

அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: ‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்டபோது,

அவர்கள்: ‘நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: ‘நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

‘அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)

(அப்போது அவர்கள்) ‘இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்’ என்று கூறினார்கள்.

அவ்வாறாயின், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று கூறினார்.

‘நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).’

‘நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே – அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).’

‘அவனே என்னைப் படைத்தான் பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

‘அவனே எனக்கு உணவளிக்கின்றான் அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.’

‘நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

‘மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான் பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.’

‘நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். (அல்-குர்ஆன் 26:69-82)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: –

‘அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்’ என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ‘(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)”  (அல்-குர்ஆன் 31:21)

“நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: ‘இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள் இன்னும் அவர்கள் ‘இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, ‘இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை’ என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்”  (அல்-குர்ஆன் 34:43)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: –

“அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.’

இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்’ என்று கூறாதிருக்கவில்லை.

(அப்பொழுது அத்தூதர்,) ‘உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ‘நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்’ என்று சொல்கிறார்கள்.

ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம் எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக! (அல்-குர்ஆன் 43:22-25)
 
தற்போது உள்ள உலகத்தில், சாதாரண உலக விஷயங்களை எடுத்துக் கொண்டால், ‘என்னுடைய தந்தை படிக்காதவராக இருந்தார் ஆகையால் அவரைப் போல நானும் படிக்காதவனாக இருக்கப் போகிறேன்’ என்று யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் கடின உழைப்பு செய்து தன்னுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கின்றனர்.

அதே போல தன்னுடைய தந்தை ஏழையாக இருந்தார், ஆகையால் நானும் ஏழையாக இருக்கப் போகிறேன் என்றும் யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் அதிகமதிகம் பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

ஏன் மார்க்க விஷயங்களில் மட்டும் முளையை மழுங்கடித்து குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையர்களை பின்பற்றுகிறேன் என்கிறார்கள்? குர்ஆனின் போதனைகளை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? குர்ஆன் உண்மையின் பக்கம் வழிகாட்டிய போதும், ஏன் குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையரை பின்பற்றுகிறார்?

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *