ஸூஹதாக்கள் கப்றுகளில் உயிரோடிருக்கின்றனரா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அல்லாஹ் கூறுகிறான்: –

“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154)

“அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்” (அல்குர்ஆன் 3:169)

கப்று வணக்க முறைகளை ஆதரிப்போர்கள் மேற்கண்ட வசனங்களையே தங்களின் முக்கிய ஆதாரங்களாக காட்டுவார்கள்.

ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களாக இருந்தாலும் அல்-குர்ஆனின் வசனங்களாக இருந்தாலும் அவைகளைப் பின்பற்றக் கூடாது; மாறாக எங்களின் மவ்லவிமார்கள் கூறுவதைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்களினால் மூளை சலவை செய்யப்பட்ட மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமரர்கள் மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, ‘ஆஹா திருமறையே ஸூஹதாக்கள் உயிருடன் தான் இருக்கின்றனர் எனக் கூறுகிததே’ என்று அவர்களின் அடக்கஸ்தலங்களுக்குச் சென்று, அந்த தியாகிகள், கப்றுகளில் உயிருடன் இருப்பதாகவும் அவர்களிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனையைச் செவியுற்று அவற்றை நிறைவேற்றி வைப்பதாகவும் நம்பிக்கைக் கொண்டு அவர்களின் கப்றுகளுக்கு மலர் வளையம் வைத்து, சந்தனம் பூசி, கொடியேற்றி, பத்தி கொழுத்தி,விளக்கு ஏற்றி மாற்று மதத்தவர்கள் செய்வது போன்று பூஜை புனஸ்காரங்கள் செய்து அவற்றை வழிபட்டு வருகின்றனர்.

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

“அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்” (அல்குர்ஆன் 44:58)

போன்ற பல இறை கட்டளைகளுக்கு மாற்றமாக ‘திருமறையின் தமிழாக்கத்தைப் படித்தால் உங்களுக்குப் புரியாது? உங்களுக்கு அரபி தெரியுமா? மதராஸாக்களில் ஏழு வருடம் படித்த எங்களுக்கே திருமறையை விளங்குவது கடினமாக இருக்கும் போது பாமர மக்களாகிய உங்களுக்கு எவ்வாறு புரியும்? என்பன போன்ற ஐயங்களை சாதாரண முஸ்லிம்களிடம் எழுப்பி அவர்களை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு வெகு தூரம் தள்ளி வைத்த்தன் விளைவாக அவர்களும் இந்த புரோகித மவ்லவிகளின் வாக்குகளே வேதவாக்கு என்று எண்ணி ஏமாந்து உயிரினும் மேலான ஈமானையும் இழந்து ‘ஷிர்க்’ என்னும் இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவத்தில் சிக்கி உழல்கின்றனர்.

இறைவனருளால் இத்தகைய மபாதக செயல்களிலிருந்து விடுபட்ட முஸ்லிம்கள் தங்களின் சகோதர சகோதரிகள், உறவினர்கள் மற்றும் நன்பர்ககளையும் இத்தகைய தீமைகளிலிருந்து விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும். இது முஸ்லிமான நம் அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது. நம்முடைய கடமை எடுத்துக் கூறுவதாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நேர்வழி காட்டுபவன் அல்லாஹ் மட்டுமே!

மேற்கண்ட வசனத்தின் விளக்கம்: –

இந்த வசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றாகள்.

மஸ்ருக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -: இவ்வசனம் குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவினோம்: அதற்கு அவர்கள் கூறினாகள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டோம்: அப்போது அண்ணலார் பின் வருமாறு விளக்கினார்கள்:

அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் உடலுக்குள் இருக்கும். அவைகள் அர்ஷில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூடுகளுக்குள் இருக்கும். சுவர்க்த்தில் அவை நினைத்தபடி சுற்றித்திரிந்து விட்டு அந்த கூட்டுக்குள் வந்து சேரும். அவற்றைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் இறைவன் கேட்பான். இனி எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நாங்களோ சுவர்க்கத்தில் விரும்பிய இடங்களிலெல்லாம் கனிவகைகளை உண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு இறைவன் மூன்று முறை அவர்களிடம் கேட்பான். தாங்கள் ஏதாவது ஒன்றை இறைவனிடம் கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணர்ந்துக் கொள்ளும் அவர்கள், இறைவா எங்கள் உயிர்கள் எங்கள் உடல்களில் மீட்கப்பட வேண்டும்: மீண்டும் ஒரு முறை உன்னுடைய பாதையில் நாங்கள் உயிர் நீக்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு வேறு எந்த தேவையும் கிடையாது என்பதை காணும் இறைவன் அவர்களை (வேறொன்றும் கேட்காமல்) விட்டுவிடுவான். ஆதாரம் : முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் ஸூஹதாக்களின் உயிர்கள் பச்சை நிற பறவையின் உடலுக்குள் இருப்பதாகவும் அவைகள் சுவர்க்கத்தில் தாம் நினைத்தபடி சுற்றி வருவதாகவும் இறைவன் புறத்திலிருந்து அவற்றிக்கு உணவளிக்கப்படுகிறது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நம்மவர்களோ அவுலியாக்களும், ஸூஹதாக்களும் கப்றுகளில் உயிரோடு இருந்துக் காண்டு இவர்கள் கொளுத்தி வைக்கின்ற பத்தி, சாம்பிராணியையும், படையல் பொருள்களாகிய பொட்டுக்கடலை, சர்க்கரை போன்றவற்றையும் மற்றும் தமது கப்ரின் மீது போர்த்தப்படுகின்ற ஆண்களுக்கு ஹராமான பட்டுத் துணியையும்பார்த்து தங்களுக்கு உதவுகிறார்கள் என்று நம்பிக்கை வைத்து இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபெரும் முஷ்ரிக்குகளாகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே: –

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)

அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்”  (அல் குர்ஆன் 16:20-21)

இறந்த நல்லடியார்களால் நம் தேவைகளைக் கேட்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; – அவ்வாறே செவிடர்களையும் – அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது – (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது”  (அல் குர்ஆன் 27:80)

“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்”  (அல்குர்ஆன் 35:14)

“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான் அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்”  (அல்குர்ஆன் 7:196-197)

அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனுடைய ஹிதாயத் என்னும் நேர்வழியை காட்டி நம் அனைவரையும் ஈடேற்றம் பெறச் செய்வானாகவும்.

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *