பெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர், ‘தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)’ என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
“அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான்.

தற்பெருமை என்பது,

(1) உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும்
(2) மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்; அத்தியாயம்: 1, பாடம்: 1.39, எண் 131)

அன்பு சகோதர, சகோதரிகளே! மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், யாருடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்கின்றதோ அவர் சுவனம் செல்ல இயலாது; மாறாக நரகத்திற்கு தான் செல்ல நேரிடும் என்பதாகும்! (அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பானாகவும்.)

நபி (ஸல்) அவர்கள், பெருமையை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். அவற்றில் முதலாவதாக உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதையும் இரண்டாவதாக மக்களைக் கேவலமாக மதிப்பதையும் குறிப்பிடுகின்றார்கள். இவ்விரண்டையும் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்து பெருமையடிப்பது!

இது ஒருவன் தன்னிடம் குடிக்கொண்டிருக்கின்ற பெருமையின் காரணமாக உண்மையையும் சத்தியைத்தையும் அகம்பாவமாக மறுப்பதைக் குறிக்கும். இவ்வாறு சத்தியத்தை மறுப்பவர்களை இரு பிரிவினர்களாகப் பிரிக்கலாம்.

முதலாமவர்:

மக்களை நேர்வழிப்படுத்துவற்காக இறைவன் இறக்கியருளிய உண்மையும் சத்தியமுமான அல்குர்ஆனை முற்றிலும் மறுத்து ஆணவமாகப் பெருமையடிப்பவராகும். இந்த வகையில் பெருமையடிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்களாவார்கள். இதற்குரிய தண்டணை மறுமையில் நிரந்தர நரகமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்.

இரண்டாமவர்:

தம் முன்னோர்களின் வழிமுறையையும் பாரம்பரியப் பெருமையையும் பேசி ஆணவமாகவும், பிடிவாதமாகவும் உண்மையும் சத்தியமுமான அல்குர்ஆனின் வசனங்களில் சிலதையோ அல்லது ஆதாரப் பூர்வமான நபிவழிகளில் சிலதையோ மறுப்பது ஆகும். இதுவும் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த உண்மைகளில் சிலவற்றை மறுக்கின்ற காரணத்தினால் ‘கிப்ர்’ என்று சொல்லப்படக்கூடிய பெருமையைச் சார்ந்ததாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன். (40:56)

நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

“யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்”

சகோதர, சகோதரிகளே! பெருமை விசயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் வசனங்களோ அல்லது பெருமானாரின் நற்போதனைகளோ நம் முன்னால் எடுத்து வைக்கப்படும் போது அவற்றை மிகுந்த எச்சரிக்கையுடன் படித்து சிந்தித்து அதன்படி செயல்பட முன்வரவேண்டும்!

சொல்பவர் நம்மை விட வயதில் சிறியவரா அல்லது பெரியவரா? அவர் படித்த மேதையா? என்பதில் கவனம் செலுத்தாமல் சொல்லப்படும் விசயம் அல்லாஹ்வின் வார்த்தையாகவும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையான ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களாக இருக்குமேயானால் அவைகள் உண்மையும் சத்தியமும் ஆகும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் நமக்கு வரக்கூடாது!

அவர்கள் கூறுவது சரியான வேத வசனங்கள் தானா? என்பதை வேண்டுமானால் இன்று கிடைக்கின்ற பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் உதவியைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம். அவ்வாறு சரிபார்ப்பதும் குழப்பமான இக்காலக்கட்டத்தில் மிக அவசியமாகவே இருக்கின்றது!

அவ்வாறு எடுத்து வைக்கப்படுகின்ற அல்-குர்ஆன் வசனங்களோ அல்லது ஹதீஸ்களோ சத்தியமான உண்மை என்று தெரிந்தும் மறுத்தோமேயானால் அல்லது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் செய்து வந்ததை மறுக்கின்ற, ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களான’ இவர்களுக்கு என்ன தெரியும்? என்று அகம்பாவமாக சத்திய வேதமான அல்குர்ஆனின் வசனங்களையும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களையும் இவர்கள் மறுப்பார்களேயானால் இவர்களின் உள்ளங்களிலும் ‘கிப்ர்’ எனும் அந்தப் பெருமைக் குடிகொண்டிருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை! இவர்கள் நபி (ஸல்) அவர்களின் ‘யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’ என்ற எச்சரிக்கையினை நினைவுப்படுத்திக்கொள்ளட்டும்.

எனவே அன்பு சகோதர, சகோதரிகளே! இறைவனின் சத்திய வேசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாக நமக்குக் கிடைத்திருக்கின்ற ஆதாரப் பூர்வமான ஹதீஸகளையும் நாம் பின்பற்றி வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த உண்மைகளை மறுத்து பெருமையடிப்பவர்களின் கூட்டத்தில் நாம் ஒருபோதும் சேர்ந்துவிடக்கூடாது. இந்த உண்மைகளை மறுத்து அல்லது இவ்வுண்மைகள் ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் போது அதைப் பற்றிக் கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக அதைப் பற்றிய எவ்வித அறிவுமில்லமாமல், ‘இவர்கள் கூறினால் அது தவறாகத் தான் இருக்கும்’ என்ற ஷைத்தானிய சிந்தனையினால் ஏற்படுகின்ற அகம்பாவத்தினால் அவ்வுண்மைகளைப் புறக்கணித்தோமேயானால் நம்மையும் அறியாமல் நாமும் அந்த பெருமையடிப்போரின் கூட்டத்தில் சேர்ந்துவிட்டதாகத் தான் ஆகும்! அல்லாஹ் நம்மனைவர்களையும் பாதுகாப்பானாகவும்.

2) மக்களை கேவலமாக கருதுவது:

பெருமையில் இரண்டாவது வகையினராக நபி (ஸல்) அவர்கள் கூறியது, மக்களைக் கேவலமாக கருதுவதையாகும். ஒருவர் தம் ஆடை மற்றும் காலனிகளை அழகாக வைத்துக்கொள்வதை பெருமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அழகிய அல்லது தரமான பொருட்களையோ வைத்திருப்பவர், சாதாரணமான பொருட்களை வைத்திருப்பவரைப் பார்த்து ‘அவர்களைவிட நான் மேலானவன்’ என்று கருதி அவர்களை கீழ்த்தரமாகக் கருதினால் அங்கு பெருமைக் குடிகொண்டிருக்கின்றது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

அது போல அதிக செல்வமுடையவர்கள் குறைவான செல்வமுடையவர்களைப் பார்த்து அவர்களை கேவலமாக மதிப்பதும் பெருமையைச் சார்ந்ததாகும்!

மிக முக்கியமான இன்னொன்றை இங்கு மிக அவசியமாக குறிப்பிட்டேயாக வேண்டும்! நமதூரில் இன்றும் கூட காணப்படுகின்ற வழக்கம், நமது முன்னோர்களுடைய காலத்தில் பிழைப்பதற்காக நமதூரில் வந்து செட்டிலாகிவிட்டவர்களைக் கேவலாமக கருதி பேசுவதாகும். (இந்த சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்; ஏனென்றால் சமுதாயத்தில் இருக்கின்ற தீமைகளைச் சொல்லிக்காட்டித் தான் திருத்த வேண்டியதிருக்கின்றது).

பல ஆண்டுகளுக்கு முன்னால் நமதூரில் செட்டிலாகி நம்மூர் மக்களாகவே ஆகிவிட்ட இவர்களை ‘பஞ்சுவெட்டி’ என்றும்; ‘பொழைக்கவந்தவன்’ என்றும் அவர்களைக் கேவலமாகக் கருதி நமதூரின் முக்கிய பிரச்சகைளில் அவர்களை ஒதுக்கி வைத்து, அவர்களின் நல்லது கெட்டதுகளில் கூட பங்கெடுக்காமல் (நானறிந்தவரை அவர்களின் மரணத்திற்கு சங்கு கூட அடிப்பதில்லை! தவறிருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்) நாங்களெல்லாம் ‘ஊர் உறவின் முறை ஜமாத்தார்கள்’ என்று பெருமை பேசி அம்மக்களை இழிவாகக் கருதுவதும் இந்தப் பெருமையின் வகையைச் சார்ந்தது தான் என்பதை திட்டவட்டமாக அறிந்துக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் உட்பட பல்வேறு முஹாஜிர்கள் மக்காவிலிருந்து மதினாவில் குடியேறியவர்கள் என்பதையும் அந்த முஹாஜிர்களிடம் தான் மதீனாவாசிகளான அன்சாரிகளை ஆளுகின்ற ஆட்சிப்பொறுப்பே இருந்தது என்பதை நாம் மறந்துவிட்டோமா? வெளியூரிலிருந்து நமதூருக்கு வந்தவர்களை ‘பஞ்சுவெட்டி’ என்பவர்கள் மக்காவிலிருந்து மதீனா வந்தவர்களை என்னவென்பார்கள்? சகோதரர்களே! நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்!

தமிழ் நாட்டிற்குள்ளேயே பிழைப்புக்காக ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊர் வந்தவர் ‘பஞ்சுவெட்டி’ ‘பொழைக்கவந்தவன்’ என்றால் ஆயிரக்காணக்கான மைல்கள் கடல்தாண்டி, நாடுவிட்டு நாடு வந்து இங்குள்ளவர்களிடம் அடிமையாக வேலைப்பார்க்கின்றோமே! நாம் எத்தகைய பஞ்சுவெட்டிகள்?

இவ்வாறு பிற மக்களை ‘பஞ்சுவெட்டி’ என்றும் ‘பொழைக்கவந்தவன்’ என்றும் இழிவாகக் கருதுவதன் மூலம் பெருமையடிப்பவர்கள், நபி (ஸல்) அவர்களின் ‘யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’ என்ற எச்சரிக்கையினை நினைவுப் படுத்திக்கொள்ளட்டும்.

அன்பு சகோதர, சகோதரிகளே! குலப்பெருமைப் பேசி மக்களை இழிவாகக் கருதுகின்ற இத்தகையை ஜாஹிலியச் சிந்தனைகளை உடைத்தெரிவதற்காகவே நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது பின்வருமாறு கூறினார்கள்:

“மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்:

எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.”

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

அல்லாஹ் கூறுகின்றான்:

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.’ (அல்-குர்ஆன் 31:18)

பெருமையடிப்பதன் விபரீதங்களை மேலும் அறிய பார்க்கவும்: தற்பெருமையும் ஆணவமும்!

அல்லாஹ் நம் அனைவர்களையும் பெருமையின் வாடைகூட நம்வாழ்வில் சேராது பாதுகாப்பானாகவும்.

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *