ஹராமான பன்றியின் இறைச்சியும் மௌலூது ஓதுப்பட்ட சீரணி சோறும் ஒன்றா?

நாம் சாப்பிடும் பொருட்களில் இயற்கையிலேயே ஹராமானவை என்று இருக்கிறது! அதே நேரத்தில் சூழ்நிலைகளின் காரணமாக ஹராமானவையும் இருக்கிறது!

பன்றியின் இறைச்சி எப்போதுமே ஹராம் தான்! ஒரு முஸ்லிம் மிக நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர அந்த உணவை எப்போதுமே உண்ணலாகாது!

ஆனால் சில உணவுப் பொருள்கள் ஹலாலாக இருந்து சூழ்நிலையின் காரணமாக ஹராமாக மாறுகின்றது!

உதாரணமாக அல்லாஹ் அல்லாத பிற மதத்தவர்களின் கடவுள்கள், முஸ்லிம்களில் இணை வைப்பாளர்களாக இருப்பவர்கள் சமாதிகளில் இருப்பவர்களுக்காகப் படைத்து ஃபாத்திஹா ஓதிய உணவுப் பொருட்கள் ஆகியவை அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் அவற்றில் கூறப்பட்டதால் அல்-குர்ஆன் வசனம் 2:173 படி அந்த ஹலாலான உணவுப் பொருட்களும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்ற முஸ்லிம்களுக்கு ஹராமானதாகும்.

“தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 2:173)

பன்றி இறைச்சியை ஒரு உண்மையான முஸ்லிம் வெறுத்து ஒதுக்குவது என்பது அதை அல்லாஹ் தடை செய்திருக்கின்றான் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இருக்க வேண்டும்! அதையல்லாமல் வேறு காரணம் இருக்க இயலாது!

நமதூரில் அசிங்கமான நிலையில் பன்றி இருக்கிறது! அதற்காக முஸ்லிம்கள் சாப்பிடுவது இல்லை என்று கூறினால் அது அவரின் அறியாமையே ஆகும்!

ஏனென்றால் மேலை நாடுகளில் மிக சுகாதாரமான முறையில் வீடுகளிலும், பண்ணைகளிலும் பன்றிகளை உணவுக்காக வளர்த்து வருகின்றனர். இன்னும் பலர் நாய், பூனை ஆகியவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது போல வீடுகளிலும் பன்றிகளை வளர்க்கின்றனர். அவற்றை தங்களின் படுக்கை அறைகளில் கூட அனுமதிக்கின்றனர்.

எனவே பன்றியின் இறைச்சியை முஸ்லிம்கள் சாப்பிடாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அதை அல்லாஹ் தடை செய்திருக்கினறான் என்ற ஒரே காரணம் தான்!

பன்றியின் இறைச்சிக்கு தடை விதித்த அல்லாஹ் தான் தன்னுடைய பெயர் கூறப்படாமல் தான் படைத்தவற்றின் பெயர் கூறப்பட்டதற்கும் தடை விதித்திருக்கின்றான் என்பதையும் உணர வேண்டும்!

அல்லாஹ்வை மட்டும் வணங்கும் ஒரு முஸ்லிமுக்கு பன்றியின் இறைச்சி எப்படி ஹராமோ அது போலவே அல்லாஹ் அல்லாத ஏனைய கடவுளர்கள், இறை நோசர்கள் போன்றவர்களுக்காக படைக்கப்பட்ட படையல் பொருள்களும் ஹராமாகும்!

அல்லாஹ் அல்லாவதற்றின் பெயர் கூறப்பட்டது என்றால் என்ன?

ஒரு முஸ்லிமின் இறை நம்பிக்கை என்னவெனில் பிரார்த்தனை, துஆ, நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல், அழைத்து உதவி தேடுதல் போன்ற அனைத்து வணக்கங்களுக்கும் தகுதிபடைத்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! என்பதாகும்!

அந்த அல்லாஹ்வைத் தவிர அவனுடைய அடியார்களாகிய நபி (ஸல்) அவர்களுகளிடமோ அல்லது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியிடமோ அல்லது சாகுல் ஹமீது பாதுஷாவிடமோ நாம் மேற்கூறப்பட்ட வணக்கங்களைச் செலுத்தும் போது அது அல்லாஹ்வுக்கு இணைவைத்ததாகின்றது!

மௌலூதுகளில் “புகழ்பாடுகின்றோம்” என்ற பெயரில் அல்லாஹ் அல்லாத இவர்களிடம் பிரார்த்தனை, அழைத்துப் பிரார்த்தித்தல், உதவி தேடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய வணக்கங்கள் செய்யப்படுகின்றன.

மாற்று மத கடவுள் பூஜைகளில் படைக்கப்பட்ட பொருள்களை அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டுள்ளதால் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் ஒரு முஸ்லிம் எப்படி சாப்பிட மாட்டானோ அது போலவே அல்லாஹ் அல்லாத நபி (ஸல்) அவர்கள், முஹ்யித்தின், சாகுல் ஹமீது பாதுஷா, ஆலிம் சாகிப் அப்பா மற்றும் இன்ன பிற அவுலியாக்களுக்காக மௌலூது ஓதி படைக்கப்பட்டப் உணவுப் பொருள்களையும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள்!

காரணம் என்னவெனில் பன்றியின் இறைச்சியை தடை செய்த அதே வசனத்தில் (2:173) தான் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்படதையும் தடை செய்திருக்கின்றான்!

இங்கு பார்க்கப்பட வேண்டியது அல்லாஹ்வின் தடையைத் தானே தவிர அது பன்றியின் இறைச்சியா? அல்லது உயர் தர சாப்பாடு பொருளான சீரணி சோறா? என்பதல்ல!

இதை மற்றொரு வகையினில் புரிந்துக் கொள்வதானால்,

பொருளாதாரம் ஈட்டுவது முஸ்லிமுக்கு ஹலாலானது! அதே பொருளாதாரத்தை வட்டிக் கடையை நடத்தி வட்டிக்கு விட்டு ஈட்டினால் அந்த பொருளாதாரம் ஹராமானதாகின்றது!

மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது ஹலாலானது! அதையே மனைவி அல்லாத பிற பெண்ணுடன் ஈடுபட்டால் அது ஹராமான விபச்சாரமாகின்றது!

இங்கே பன்றியின் இறைச்சியை சாப்பிடுவது எப்படி ஹராமானதோ அது போலத் தான் அந்த வட்டியின் மூலம் ஈட்டிய பொருளாதாரமும், மனைவி அல்லாத மற்றொரு பெண்ணிடம் கூடுவதும் அவனுக்கு ஹராமாகின்றது!

இதை புரிந்துக்கொண்டால்,

பொதுவாக ஹலாலாக இருக்கும் உணவுப் பொருளாகிய சீரணி சோறு அல்லாஹ் அல்லாத நபி (ஸல்) அவர்களுக்கோ அல்லது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கோ படைக்கப்படுவதால் அவை ஹராமாகின்றன என்பதையும்

எல்லா ஹராமானதும் ஒன்றே என்பதையும் விளங்கலாம்!

“ஹராத்தை உண்டு வளரும் ஒவ்வொரு உடம்பும் நரகத்துக்கே உரியதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)

“ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது. இந்த இரண்டுக்கும் இடையில் தெளிவில்லாத சில விடயங்களும் இருக்கின்றன. அவற்றை அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள். யார் சந்தேகத்துக்கு இடமானவற்றை விட்டு விடுகிறாரோ அவர் தனது மானத்தையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக்கொண்டார். யார் அதனை பேண வில்லையோ அவர் ஹராத்தில் விழுந்து விட்டார். அவருக்குரிய உதாரணம் வேலியோரத்தில் மந்தை மேய்ப்பவர் போல! மந்தை சில வேளை வேலியை தாண்டவும் முடியும். அறிந்துகொள்ளுங்கள் ஒவ்வொரு அரசனுக்கும் வேலிகள் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய வேலி அவன் ஹராமாக்கியவைகளே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *